இங்கிலாந்து ராணி மற்றும் இளவரசர் பிலிப் இருவருக்கும் முதலாவது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது

Queen & Prince

இங்கிலாந்து ராணி மற்றும் இளவரசர் பிலிப் இருவருக்கும் முதலாவது  கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

அரச ஜோடிக்கு வின்ட்சர் கோட்டையில் வைத்து அரச குடும்பத்துக்காக வைத்தியர் ஒருவரால் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது.

94 வயதாகும் அரசி மற்றும் 99 வயதாகும் இளவரசர் இருவரும் அரசாங்க விதிகளின் படி தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வயதெல்லையில் இருப்பதன் காரணமாகவே இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன .

அரச குடும்பத்து தனிநபர் ஆரோக்கியம் சம்பந்தமான செய்திகள் இதுவரை வெளியாகி இருக்காத நிலையில் அரசாங்க பேச்சாளர் எதற்க்காக இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது பலராலும் உன்னிப்பாக நோக்கப்பட்டது.

அரசகுடும்பத்துக்கு தடுப்பூசி முன்னிலைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது தொடர்பாக தவறான தகவல்கள் வெளியாவதையும், தேவையற்ற ஊகங்கள் பரவுவதையும் தவிர்ப்பதற்க்காகவுமே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டிருப்பதாக மேலதிக தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டது எந்த வகையான தடுப்பூசி என்ற விபரத்தை வெளியிட பேச்சாளர் விரும்பவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களுக்கு இதுவரை முதலாவது  கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும், இது மிகவும் வயதான, இலகுவில் பாதிப்புக்கு உள்ளாககூடிய சனத்தொகையில் கால்வாசியை மட்டுமே உள்ளடக்குவதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.