சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்… இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்?.

FB Mark, Instagram, Whatsapp

இன்று ஒரு சந்தையில் நிறுவனங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதிப்படுத்தக் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இவை ‘Antitrust’ சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் ஒரு சந்தையில் அதற்கு இருக்கும் ஆதிக்கத்தை வைத்து வளர்ந்துவரும் போட்டி நிறுவனங்களை ஒடுக்குவது, இடையூறுகள் கொடுப்பது போன்றவை நடக்கக்கூடாதென இந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் இதைக் கண்காணிக்க அரசு அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் Competition Commission of India ஆணையம் இதற்குத்தான் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து பெரிய டெக் நிறுவனங்கள் இது போன்ற சட்டங்களை மீறுகின்றன, போட்டி நிறுவனங்களை நசுக்குகின்றன என்ற குற்றச்சாட்டு சில வருடங்களாகவே வைக்கப்பட்டுவருகிறது. இதை அமெரிக்கா காங்கிரஸ் ஒரு குழு அமைத்து விசாரிக்கவும் தொடங்கியது.

பிரைவசி பஞ்சாயத்துகளில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், இப்போது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்பது மொத்தமாகவே ஃபேஸ்புக்கை காலி செய்யும் ஆபத்து இருக்கிறது!

கடந்த ஜூலை மாதம் ஃபேஸ்புக், அமேசான், கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் CEO-க்களை ஒரே நேரத்தில் அழைத்து இதுகுறித்து சரமாரியான கேள்விகள் கேட்டது அமெரிக்கா காங்கிரஸ். மொத்தமாக ஓர் ஆண்டுக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்த நான்கு நிறுவனங்களுமே போட்டியை விரும்பவில்லை. போட்டி நிறுவனங்களை ஒடுக்கப் பல செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின் நீதித்துறை மற்றும் 11 மாகாணங்கள் கூகுள் மீது அக்டோபர் இறுதியில் வழக்கு தொடர்ந்தது. இணையத் தேடல் சந்தையில் தனிப்பெரும் நிறுவனமாக இருக்கக் கூகுள் ‘Antitrust’ சட்டங்களை மீறும் பல செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன என்றது அந்த அறிக்கை. இது பெரும் டெக் நிறுவனங்களின் ‘Monopoly’-க்கு எதிரான முதல் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

இப்போது இன்னும் கடுமையான வழக்குகள் ஃபேஸ்புக் மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன. Federal Trade Commission (FTC)-ம் 46 மாகாண அரசுகளும் ஃபேஸ்புக் மீது வழக்குகள் தொடுத்திருக்கின்றன. Antitrust சட்டங்களை மீறிய ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமை பிரிக்கவேண்டும் என்கின்றன இந்த வழக்குகள். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் சரி மார்க் சக்கர்பெர்க்குக்கும் சரி சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. பிரைவசி பஞ்சாயத்துகளில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், இப்போது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்பது மொத்தமாகவே ஃபேஸ்புக்கை காலி செய்யும் ஆபத்து இருக்கிறது.

 

சரி, அப்படி என்ன செய்தது ஃபேஸ்புக்?

“Copy, Acquire, Kill” என்ற யுக்தியை ஃபேஸ்புக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அனைத்தும் 2012-ல் இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் கைப்பற்றியதிலிருந்துதான் தொடங்குகிறது. மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்த இன்ஸ்டாகிராமை அச்சுறுத்தலாக எண்ணியே அதை வாங்கியது ஃபேஸ்புக் என்கிறது விசாரணை அறிக்கை. மார்க் மற்றும் பிற ஊழியர்களின் மின்னஞ்சல் உரையாடல்களை வைத்துப் பார்த்தால் இன்ஸ்டாகிராமை குறிவைத்து அதன் மீது அதிக அழுத்தம் கொடுத்தே அதை ஃபேஸ்புக் வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. இது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமை வாங்கியவுடன் வேண்டுமென்றே அதன் வளர்ச்சியை தடுத்து, ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக இல்லாத வண்ணம் இன்ஸ்டாகிராம் மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூறுகிறது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம்மின் மூத்த முன்னாள் ஊழியர்களுள் ஒருவர் காங்கிரஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமை விற்க மறுத்திருந்தால் அதே போன்ற ஒரு சேவையை ஆரம்பித்து இன்ஸ்டாகிராமுக்கு இன்னும் நெருக்கடி ஃபேஸ்புக் கொடுத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டியை நசுக்கி சந்தையில் தனிப்பெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக் குறிக்கோள் என்கிறது இந்த அறிக்கை. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என இரண்டு கட்சிகளுமே இணைந்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

ஆனால், இவை இரண்டுமே போட்டியை நசுக்கும் நோக்கத்தில் ஃபேஸ்புக் செய்த ஒப்பந்தங்கள்தான் என்கிறது FTC. இதனால்தான் வழக்கில் இந்த இரண்டு நிறுவனங்களையும் ஃபேஸ்புக்கிடமிருந்து பிரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. உடனடியாக இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்பட வாய்ப்பில்லை. சட்ட அளவிலேயே பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால்தான் இது சாத்தியப்படும். இருந்தும் ஃபேஸ்புக் பிரிக்கப்படவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருப்பதுடன் முதல் கட்ட நடவடிக்கையையும் FTC எடுத்திருப்பது ஃபேஸ்புக்கிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. புதன் அன்று பங்குச்சந்தையில் சுமார் 4% வீழ்ச்சியை சந்தித்தது ஃபேஸ்புக்.

இப்படி இன்ஸ்டாகிராமும், வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கிடமிருந்து பறிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

போட்டி நிறுவனத்தை காலி செய்வது ஒரு முக்கிய காரணம் எனச் சொல்லப்பட்டாலும் ஃபேஸ்புக் இந்த நிறுவனங்களை வாங்கியதற்குப் பின் இன்னும் சில யுக்திகளும் இருக்கின்றன. சமூக வலைதளங்களை பொறுத்தவரையில், ஒன்று அனைவரும் பயன்படுத்துவார்கள், இல்லை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் என அறிந்தவர் மார்க் சக்கர்பெர்க். எப்படியும் ஃபேஸ்புக்கின் வளர்ச்சி குறையும், மொத்தமாக மக்கள் ஃபேஸ்புக்கை புறக்கணிக்கும் நாள் கூட வரலாம். அப்போது மக்கள் தேடும் மாற்று தன்னிடமே இருக்க வேண்டும் என எண்ணினார் மார்க். அந்த நோக்கில்தான் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை வாங்கினார். இந்த முதலீடுகளால் பலன்களைப் பெறவும் ஆரம்பித்துவிட்டது ஃபேஸ்புக்.

எந்த நிறுவனமும் இருக்கும் இடத்திலேயே இருந்தால் மதிப்பு கிடையாது. வளர்ச்சியைக் காட்டினால்தான் முதலீட்டாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். அப்படி ஃபேஸ்புக்கை மட்டும் வைத்து இனி வளர்ச்சியை மார்க் சக்கர்பெர்க்கால் காட்ட முடியாது. காரணம், விளம்பரங்களிலிருந்துதான் ஃபேஸ்புக் வருமானம் பார்க்கிறது. ‘இதற்கு மேல் விளம்பரம் போடனும்னா ஸ்டேட்டஸ்க்கு நடுவுலதான் போடனும்’ எனச் சொல்லும் அளவுக்குக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் ஃபேஸ்புக் விளம்பரங்கள் காட்டி வருகிறது. இன்னும் கொஞ்சம் அதிக விளம்பரங்கள் போட்டால் மொத்தமாகப் பயனர் அனுபவமே மோசமாகி விடும் என்ற சிக்கலில் இருக்கிறது ஃபேஸ்புக். கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஃபேஸ்புக் ஊடுருவியும் விட்டது, முடிந்தளவு பயனாளர்களைக் கைப்பற்றிவிட்டது. இதற்கு மேல் புதிதாகச் சேர்க்கவும் போதிய வாடிக்கையாளர்கள் சந்தையில் இல்லை. ஃபேஸ்புக்கில் கூடுதல் வருமானம் ஈட்ட மார்க் போட்ட ‘Marketplace’ போன்ற திட்டங்களும் பெரிதாக எடுபடவில்லை. வீடியோக்களில் அதிக விளம்பரங்கள் போட்டு வருமானத்தைப் பெருக்கலாம் என முயற்சி செய்து பார்த்தார்கள் அது பயனர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இப்போது வருமான வளர்ச்சி என்பது மொத்தமாகவே இன்ஸ்டாகிராமிலிருந்து வருவதுதான்.

நேரடியாக படங்கள்/வீடியோக்களிலிருந்து பொருட்களை வாங்கும் ஷாப்பிங் வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது இன்ஸ்டாகிராம். தீவிர முயற்சியால் இன்று பல நிறுவனங்களும் தங்களது சேவைகள்/தயாரிப்புகளை மக்களிடம் சேர்க்க இன்ஸ்டாவில்தான் அதிக விளம்பரங்கள் தருகின்றன. இன்ஸ்டாவில் விளம்பரம் தர வேண்டுமென்றால் ஃபேஸ்புக்கில் பக்கம் ஒன்று தொடங்கியிருக்க வேண்டும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக்கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். 2019-ல் இன்ஸ்டாவிலிருந்து மட்டும் 20 பில்லியன் டாலர் வருமானம் பார்த்திருக்கிறது ஃபேஸ்புக். இதன் மொத்த வருமானத்தில் இது 29%. இந்த வருடம் இன்ஸ்டாகிராமிலிருந்து சுமார் 28.1 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் எனக் கணிக்கிறது EMarketer எனும் ஆய்வு நிறுவனம். இது ஃபேஸ்புக்கின் மொத்த வருமானத்தில் 37% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த வருடம் ஃபேஸ்புக்கின் வருமான வளர்ச்சியில் இன்ஸ்டாகிராமின் 8.1 பில்லியன் டாலர் வளர்ச்சி மிகப் பெரிய பங்காக இருக்கும்.

வாட்ஸ்அப் பொறுத்தவரையில் இன்னும் அதிலிருந்து எந்த வருமானமும் பார்க்கத் தொடங்கவில்லை ஃபேஸ்புக். ஆனால், விரைவில் பணம் காய்க்கும் மரமாக வாட்ஸ்அப்பும் மாறும் என எதிர்பார்க்கிறது ஃபேஸ்புக். ஏற்கெனவே பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சென்று சேர வாட்ஸ்அப் பிசினஸ் வசதியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. விரைவில் முக்கிய நாடுகளில் வாட்ஸ்அப் பே என்னும் பண பரிவர்த்தனை சேவையும் வாட்ஸ்அப்புடன் இணையப்போகிறது. டெக் நிறுவனங்கள் அனைத்துமே இந்தியாவைத்தான் வளர்ந்து வரும் மிக முக்கிய இணையச் சந்தையாகப் பார்க்கின்றன. சீன நிறுவனங்களுக்கு முன்பு இங்கு கால்பதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன. ஜியோவுடன் ஃபேஸ்புக் கூட்டணி அமைத்தது இதனால்தான். இந்த கூட்டணியில் வாட்ஸ்அப்தான் மிக முக்கிய பங்காற்றப்போகிறது. 

நன்றி விகடன்