முடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள்

Signal

வாட்சாப் செயலியை போன்று செய்தி, படங்கள், காணொளியைப் பகிரும் செயலியான சிக்னலை, பல லட்சம் புதிய பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கியதால், நேற்று (ஜனவரி 15) தொழில்நுட்ப ரீதியாக சில சிக்கல்களைச் சந்தித்ததாக தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று சில மணி நேரங்களுக்கு செல்போன் மூலமாகவோ அல்லது கணிணி மூலமாகவோ யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என சில சிக்னல் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் வாட்சாப் செயலி புதிய தனியுரிமை கொள்கையை கொண்டு வந்ததிலிருந்து, சிக்னலை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

“இதுவரை வரலாறு காணாத வகையில் எங்களின் சர்வர்களின் அளவை அதிகரித்திருக்கிறோம். எங்களின் சேவையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர பணியாற்றி வருகிறோம்” என சிக்னல் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது

“லட்சக்கணக்கான புதிய பயனர்கள் தங்களின் தனியுரிமை முக்கியம் என்கிற செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்” எனவும் சிக்னல் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

வாட்சாப் செயலியின் புதிய விதிமுறைகளின் காரணமாக பயனர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற மற்ற செயலிகள் பயனடைந்து வருகின்றன.

வாட்சாப்பை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்றால், ஃபேஸ்புக்குடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள, பயனர்கள் சம்மதிக்க வேண்டும் எனக் கூறியது வாட்சாப் நிறுவனம்.

இந்த விதிமுறை பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பொருந்தாது. இருப்பினும் இந்த விவரத்தை அனைவருக்கும் அனுப்பியது வாட்சாப்.

ஃபேஸ்புக்குக்கு தன் தரவுகளைக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல என்றும், அதை விரிவாக்கமாட்டோம் எனவும் அழுத்தமாகக் கூறி வருகிறது வாட்சாப்.

ஆரம்பத்தில் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் இந்த புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றது வாட்சாப். ஆனால் தற்போது இந்த கடைசி தேதியை மே 15-ம் தேதி வரை ஒத்தி வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழப்பம் நிலவுவதாகவும், அதை தீர்க்க, இந்த கூடுதல் கால கட்டத்தைப் பயன்படுத்துவோம் என்றும் வாட்சாப் கூறியுள்ளது.

“எங்களால் (வாட்சாப் மற்றும் ஃபேஸ்புக்) உங்களின் தனி நபர் செய்திகளை பார்க்கவோ அல்லது நீங்கள் பேசும் அழைப்புகளை கேட்கவோ முடியாது” என வாட்சாப் செயலி தன் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளது.

வாட்சாப் தன் தனியுரிமை கொள்கை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முந்தைய வாரம் சிக்னல் செயலியை சராசரியாக 2.46 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால் வாட்சாப்பின் கொள்கை வெளியான அடுத்த வாரம் 88 லட்சமாக பதிவிறக்கங்கள் உயர்ந்துள்ளதாக சென்சார் டவர் என்கிற தரவு பகுப்பாய்வு நிறுவனம் கூறுகிறது.

குறிப்பாக, இந்தியாவில் சிக்னல் பதிவிறக்கங்கள் 12,000-ல் இருந்து 27 லட்சமாகவும் அதிகரித்திருக்கிறது. பிரிட்டனில் 7,400-ல் இருந்து 1.91 லட்சமாகவும், அமெரிக்காவில் 63,000-த்திலிருந்து 11 லட்சமாகவும் அதிகரித்திருக்கிறது.

கடந்த புதன்கிழமை, உலக அளவில் டெலிகிராமின் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துவிட்டதாகக் கூறியது அந்நிறுவனம். வாட்சாப்பின் புதிய கொள்கை வருவதற்கு முந்தைய வாரம் 65 லட்சமாக இருந்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கை, அதன் பிறகு 1.1 கோடியை தொட்டிருக்கிறது.

இதே காலகட்டத்தில், வாட்சாப் செயலியின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 1.13 கோடியிலிருந்து 92 லட்சமாக குறைந்திருக்கிறது.

நன்றி BBC