மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை…

DATA Charity ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை – 10/04/2021) காலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது 

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில், பாதிக்கப்பட்டோர் சார்பாக மலரும் புத்தாண்டில் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இந்த ஆண்டில் நிறைவேற்றித் தருமாறு அன்போடு வேண்டுகின்றோம் .

  1. மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்.
  2. மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி.
  3. பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்.

அத்தோடு போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்தான கொள்கை உருவாக்கத்தையும் கோருகின்றோம்.

போர் ஓய்ந்து 12 வருடங்களை கடக்கின்றோம். போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றைய மாகாணங்களிலும் பார்க்க அதிகம்.

பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அவர்களின் வலியை ஆற்றுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் இலங்கை அரசும், மாகாண அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், உறவுகளும் ஆற்றிவரும் சேவைகளை நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

இருந்த போதும் எமது தேவைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது என்பதை நாம் எமது உறவுகளின் முன் சொல்ல வேண்டியுள்ளதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.

1.மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால தேவையாக உள்ளது. இன்னொருவரில் முழுமையாக தங்கி வாழ்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமக்கான ஒரு காப்பகங்கள் இல்லை என்று ஏங்குகின்றார்கள். அவ்வாறான காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோருகின்றோம்.

2.மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி
இன்னொருவரில் பெரிதும் தங்கி வாழ்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபா 10,000 மாதாந்த உதவித் தொகையாக கொடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.

உதாரணமாக,

  1. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்
  2. இரண்டு கரங்களையும் இழந்தவர்கள்
  3. பல அங்கங்களை இழந்தவர்கள்
  4. இரண்டு கண்களையும் இழந்தவர்கள்
  5. இரண்டு கால்களையும் முற்றாக இழந்தவர்கள்.
  6. முதுமையில் அநாதைகள் ஆக்கப்பட்டவர்கள்

3.பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்
கிராமங்களை மையப்படுத்தி இயங்கி வரும் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுக்கு, அவை தொடர்ச்சியாக இயங்குவதற்கு பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.

சுயமதிப்பீட்டுமாநாடு
பாதிக்கப்பட்டோரும் அவர்களோடு பயணிப்போரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் 2019ம் ஆண்டு ஓர் சுய மதிப்பீட்டு மாநாட்டை நடாத்தினோம்.

இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல அமைப்புக்களும், சமூக சேவை திணைக்களங்கள், அரச அதிபர்கள், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அதில் பாதிக்கப்பட்டவர்களை நான்கு பிரிவினர்களாக வகுத்து அந்த மாநாட்டை நடாத்தினோம்.

  1. மாற்றுத்திறனாளிகள்
  2. பெற்றோரை இழந்த பிள்ளைகள்
  3. பிள்ளைகளை இழந்த பெற்றோர் (முதியவர்கள்)
  4. பெண்தலைமை குடும்பங்கள்

அந்த மாநாட்டில் நாம் எமது கோரிக்கைகளை வகைப்படுத்தி பிரகடணங்களாக வெளிப்படுத்தி இருந்தோம்.

அந்த கோரிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய கோரிக்கைகளை இந்த வருடத்திலேயே நிறைவேற்றி தருமாறு நாம் கோரி நிற்கின்றோம்.இந்த கோரிக்கைகளை மக்களிடமும், அரச தரப்பினரிடமும் எடுத்துச் செல்ல அனைவரும் உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

http://www.datatamil.com/ta

Read More
REAP 2021

புதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..

இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்துவருபவர்கள் , வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் பல உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் DATA CHARITY அமைப்பினரது மற்றுமொரு மகத்தான பணி

போரினால் அங்கங்களை இழந்து, குடும்ப துணையை இழந்து வலியோடு வாழ்வோர் தம் வாழ்வுக்காக முன்னெடுக்கும் தொழிலில் நாமும் ஒரு பங்காளராக இருப்போம்.
போரைத்தாண்டி… இன்று கொரோனா….
மீண்டும் மீண்டும் வாடும் நம் உறவுகள்.

இரு கைகளை இழந்தவர் கடை நடாத்துகின்றார்.
கழுத்துக்கு கீழ் இயக்கமற்றவர் கடை நடாத்துகின்றார் ஒரு முதலாளியாக……
காலை இழந்தவர் கமம் செய்கின்றார்.
பொய்க்காலோடு நின்று சலூன் நடாத்துகின்றார்.

சுமக்க முடியாமல் சுமக்கிறார்கள் தம் குடும்பத்துக்காக……
நாம் ஏற்கனவே பாதிக்கப்பட்டோரில் சிலரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றோம். அவர்கள் தங்களது முயற்சியை பலப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை எங்கள் இணையத்தில் www.datatamil.com காணலாம்

REAP 2021

வருடம் ஒரு குடும்பத்துக்கு ஒளியேற்றுங்கள்ஒளியின் விலை : £200 (ஒரு வருடத்துக்கு)
அது தரும் பிரகாசம் ஒரு குடும்பத்திற்கு வாழ்வு. இவர்கள் வாழ்வில் நீங்களும் உங்கள் அன்பை பகிருங்கள்
உங்கள் அன்பை பகிர – http://virginmoneygiving.com/fund/2021

இந்த வருடம் 100 பேரினது தொழில் முயற்சியை வழப்படுத்த, ரூபா 50,000 சுழற்சி முறை மேம்பாட்டு திட்டமாக வழங்கப்படும். அவர்கள் தங்கள் தொழிலை வளப்படுத்தி முன்னேறும் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் உதவிகளை பெறலாம்.

வலியாற்றுதல் – Palliative care

அதேவேளை வலியோடு வாடுவோருக்கும் அவர்களில் வலியாற்றுதலில் பங்கெடுக்க, உழைக்கும் வலு முற்றாக இழந்து, மீளா நோயில் வாழ்வு மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களின் வலியை ஆற்ற அவர்களுக்கு உதவியாக, ஊட்ட உணவுக்காக, வைத்திய சாலை போக்குவரத்து செலவுக்காக மாதம் ரூபா 5000 வழங்குவோம். வருட நிதி: £250 (ரூபா.60,000)

இந்த இணைய வழியாக வலியாற்றுங்கள். – http://virginmoneygiving.com/fund/2021

(நன்கொடையாளர்கள் பயனாளிகளோடு www.datatamil.com வழியாக தொடர்பில் இருக்கலாம்)
பாதிக்கப்பட்டோர் சமூகம் தங்கி வாழ்தலில் இருந்து விடுதலை அடையட்டும்.

Read More

பாதிக்கப்பட்டோரும் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)

பாதிக்கப்பட்டோர் குறித்தான ஆழமான புரிந்துணர்வும் அவர்களின் தேவைகள் குறித்து பரந்துபட்ட அளவில் விவாதங்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தின் தமிழ் ஊடகவியலாளர்களை தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சனிக்கிழமை (20.02.2020) மட்டக்களப்பில் சந்தித்தது.

பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்கள்

  1. கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய புள்ளிவிபரம் என்ன?
  2. மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை என்ன?
  3. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை என்ன?
  4. என்ற வினாக்களோடு மட்டுமல்லாது பெற்றோரை இழந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த விபரங்கள் எவை?
  5. பிள்ளைகளை இழந்த பெற்றோரின் விபரங்கள் என்ன?

என்பது பற்றி பொதுவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று DATA அமைப்பினர் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

போரின் போதும் போரின் பின்னரான காலப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டோரது பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில் ஊடகங்கள் பெரும் பங்காற்றி இருக்கின்றன.

அந்த ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களோடு இன்னும் நெருக்கமாக இணைந்து செயற்படக்கூடிய வழிவகைகளை ஆராய்வதும் ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த சந்திப்பின் நோக்கமாக அமைந்திருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் பெருமளவு பேசப்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஆனால் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான அமைப்புக்கள், முதியோர்களுக்கான அமைப்புகள் போன்றவை இன்னமும் பெரிதாக பேசப்படவில்லை என்ற பொதுவான கருத்து இருக்கின்றது

பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான கொள்கை உருவாக்கம்

மாற்றுத்திறனாளிகள் குறித்து இந்த சமூகம் எவ்வாறான கொள்கையை வகுத்துள்ளது

அதே போல ஏனைய பாதிப்புக்குள்ளானவர்களுக்காக இந்த சமூகத்தின் கொள்கைகள் எவ்வாறு அமையப் போகின்றது என்ற கேள்விகள் தற்போதைய காலநிலையில் கேட்கப்பட வேண்டியதாக அமைகின்றது.

பாதிக்கப்பட்டோருக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர்களை நோக்கி செயல்படுத்தப்படும் திட்டங்கள், பரந்துபட்ட அளவில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியவாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கை பாதிக்கப்பட்டவரிடம் இருக்கின்றது.

இந்த பணிகளில் ஊடகவியலாளர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி

மாற்றுத்திறனாளிகளை பேசுபொருளாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கோடு தமிழ் பரா விளையாட்டு விழா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றன.

மீண்டும் 2020ஆம் ஆண்டு தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், வடக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது.

இக் கலந்துரையாடலில் அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

இவ்வருட இசைச் சமர் வரும் மார்ச் 14 ஆம் திகதி இடம்பெறும்

பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளுக்கு கரம் கொடுக்க வருடாவருடம் நடை பெறும் இசை சமர் 2017 ,2018 ,2019 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றது .

இந்த ஆண்டு ( 2020 ) வரும் மார்ச் 14 ஆம் திகதி 26 போட்டியாளர்கள் பங்குபற்றலுடன் இலண்டனில் இடம்பெறவுள்ளது .

இந்த போட்டிமூலைம் இசை கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதுடன் பாதிக்கப்படடவர்களுக்கும் நன்மை ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது .

Read More
TPS 2018

20 நிமிடம் எமக்காக இதைப்பாருங்கள் – Tamil Para Sports

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா ஒரு திருவிழாதான். மகிழ்வான இந்த விழா மாற்றுத்திறனாளிகளினால் நடாத்தப்படுகின்றது.

நாங்கள் வலியோடு வாழப்பழகியவர்கள், பல சாதனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். மகிழ்ச்சிதான் சாதிக்கத்துடிக்கும் திறனாளிகள் சார்பாகத்தான் பேசுகின்றேன்.

ஆனாலும் , உழைக்கும் வலுவும் இழந்து , உதவிகளும் அற்று தெருவோரம் யாசித்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளும் எம் சமூகத்தில் இன்னமும் இருக்கிறார்கள் , அழுத்தப்புண்ணும் , மனப்புண்ணும் ஆற்றொணாத்துயரமாய், ஊணோடு உயிரை உருக்க, அழுந்தி அழுந்தி மாண்டு போகும் திறனாளிகளுக்காகவும் நான் இங்கு பேசுகின்றேன்.

இன்னமும் பேச வேண்டும்

Read More
Sajiraani

அகதிமுகாமில் அப்பம் சுட்டு ஆரம்பித்து, அப்பள கம்பெனி ஆகிய கதை…

பெண் தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி சஜிராணி

அகதிமுகாமில் அப்பம் சுட்டு ஆரம்பித்து, அப்பள கம்பெனி ஆகிய கதை…

அகதிமுகாமுக்குள் தொடங்கிய சிறு வியாபாரம் இன்று 16 பேருக்கு வேலை கொடுத்து பெருகும் முயற்சில் DATAவும் பங்கெடுக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கும் தொழில் வாய்ப்புக்கள்…

Read More
DATA அமைப்பின்

DATA அமைப்பின், பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு DATA அமைப்பினால் ஒழுங்கு படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip Hall சனிக்கிழமை நடைபெற்றது.

போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் சுயமதிப்பீட்டு மாநாடு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. மாநாடும் அதன் பின்னரான செயற்பாடுகளையும், DATA அமைப்பின் நோக்கங்கள் செயல்பாடுகளை விளக்கும் நோக்கோடும் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது.

வட மாகாணத்தில் மட்டும் 20,011 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சமூக சேவைத் திணைக்களம் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது என்ற தகவலை DATA அமைப்பு பகிர்ந்ததோடு இந்த மாற்றுத்திறனாளிகள் இன்னமும் பத்து வருடங்களில் எந்த நிலையில் வாழப் போகிறார்கள் என்று நாங்கள் சிந்திக்கத் தலைப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தது.

மாற்றுத்திறனாளிகளை போல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரில் பெற்றோரை இழந்த சிறுவர்கள், போரினால் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோரின் விதிகளை இன்னும் 10 வருடங்களில் அவரது வாழ்வியல் எவ்வாறு இருக்கப் போகின்றது என்றும் நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது சிரேஸ்ர பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டோர் குறித்தான பரந்த புரிதலோடு அவர்களுடைய அபிலாசைகளையும், அவர்களுக்குரிய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பாதிக்கப்பட்டோரோடு நாங்கள் அனைவரும் இணைந்து பயணிப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து, இனிவரும் காலங்களில் தங்களது பணிகளையும், இவர்களுக்கான சேவையினையும் இன்னும் விரிவுபடுத்துவதற்காக அவர்கள் முன் வந்தமைக்கு தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு – DATA நன்றி பாராட்டுகிறது.

Read More
#REAP, #DATA

சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிரானி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக்கோடு DATA அமைப்பினால் இருபத்தைந்து லட்சம் ரூபாய் கடனுதவியாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சஜிரானி அவர்களினால் உருவாக்கப்பட்ட அப்பள உற்பத்தி தொழிற்சாலை தற்போது அதன் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது.

DATA_REAP

பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சுயமதிப்பீட்டு மாநாட்டில் சாதனையாளர் வரிசையில் சஜிராணி அவர்கள் கலந்து கொண்டு, தான் கணவரை இழந்த பின்னர் எவ்வாறு இந்த சமூகத்தில் ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக கொண்டு செல்கின்ற தனது சாதனைப் பயணம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதன் பின்னர் அவரது தொழில் முயற்சியினை விருத்தி செய்வதற்காக அவருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா கடனுதவி தேவைப்படும் விடயத்தினையும் DATA அமைப்பிடம் தெரியப்படுத்தியிருந்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலமே அவர்களது தங்கி வாழ்தல் என்ற நிலையில் இருந்து மீளலாம் – DATA

அவரது கோரிக்கையினை ஏற்று அவரது தொழில் முயற்சிக்கு கடனுதவி வழங்குபவர் ஒருவரை DATA அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. செல்வி விஜயலட்சுமி பசுபதிப்பிள்ளை அவர்கள் இந்த நிதியினை அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபாவாதி கேதீஸ்வரன் அவர்களினால் காசோலை வழங்கப்பட்டதோடு இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஜிரானி அவர்களின் அப்பள தொழிற்சாலையில்  06 மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகிறார்கள் அத்தோடு அங்கு பணியாற்றுபவர்கள் போரினால் பெரும்பாலும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது .

போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலமே அவர்களது தங்கி வாழ்தல் என்ற நிலையில் இருந்து மீளலாம் என்ற தொனிப்பொருளோடு DATA பல்வேறு திட்டங்களை அண்மை காலங்களில் நடாத்தி வருகின்றது .

Read More