தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா ஒரு திருவிழாதான். மகிழ்வான இந்த விழா மாற்றுத்திறனாளிகளினால் நடாத்தப்படுகின்றது.
நாங்கள் வலியோடு வாழப்பழகியவர்கள், பல சாதனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். மகிழ்ச்சிதான் சாதிக்கத்துடிக்கும் திறனாளிகள் சார்பாகத்தான் பேசுகின்றேன்.
ஆனாலும் , உழைக்கும் வலுவும் இழந்து , உதவிகளும் அற்று தெருவோரம்
யாசித்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளும் எம் சமூகத்தில் இன்னமும்
இருக்கிறார்கள் , அழுத்தப்புண்ணும் , மனப்புண்ணும் ஆற்றொணாத்துயரமாய்,
ஊணோடு உயிரை உருக்க, அழுந்தி அழுந்தி மாண்டு போகும் திறனாளிகளுக்காகவும்
நான் இங்கு பேசுகின்றேன்.
பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல்
ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற
விடயத்தை ஆராயும் பொருட்டு DATA அமைப்பினால் ஒழுங்கு படுத்தப்பட்ட
ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip
Hall சனிக்கிழமை நடைபெற்றது.
போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் சுயமதிப்பீட்டு மாநாடு
பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
மாநாடும் அதன் பின்னரான செயற்பாடுகளையும், DATA அமைப்பின் நோக்கங்கள்
செயல்பாடுகளை விளக்கும் நோக்கோடும் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு
செய்யப்பட்டது.
வட மாகாணத்தில் மட்டும் 20,011 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சமூக
சேவைத் திணைக்களம் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது என்ற தகவலை DATA அமைப்பு
பகிர்ந்ததோடு இந்த மாற்றுத்திறனாளிகள் இன்னமும் பத்து வருடங்களில் எந்த
நிலையில் வாழப் போகிறார்கள் என்று நாங்கள் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்
என்ற வேண்டுகோளையும் விடுத்தது.
மாற்றுத்திறனாளிகளை போல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரில் பெற்றோரை
இழந்த சிறுவர்கள், போரினால் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோரின்
விதிகளை இன்னும் 10 வருடங்களில் அவரது வாழ்வியல் எவ்வாறு இருக்கப்
போகின்றது என்றும் நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள்
விடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது சிரேஸ்ர பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள்,
சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டோர்
குறித்தான பரந்த புரிதலோடு அவர்களுடைய அபிலாசைகளையும், அவர்களுக்குரிய
தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பாதிக்கப்பட்டோரோடு நாங்கள் அனைவரும்
இணைந்து பயணிப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து, இனிவரும்
காலங்களில் தங்களது பணிகளையும், இவர்களுக்கான சேவையினையும் இன்னும்
விரிவுபடுத்துவதற்காக அவர்கள் முன் வந்தமைக்கு தமிழ் மாற்றுத்திறனாளிகள்
அமைப்பு – DATA நன்றி பாராட்டுகிறது.